வடகிழக்கு பருவமழை தொடங்கியது 19 மாவட்டங்களில் இன்று கனமழை:

Total Views : 37
Zoom In Zoom Out Read Later Print

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. இதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நேற்று தொடங்கியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 19-ம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அதேபோல், 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்றும் (அக்.17), நாளையும் பெரும்பாலான இடங்களிலும், 19 முதல் 22-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக்கனமழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 18, 19-ம் தேதிகளிலும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், திருச்செந்தூரில் தலா 15 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

See More

Latest Photos