ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு! 4வது நாளாக சுற்றுலா தடை வெள்ள அபாய எச்சரிக்கை..
சென்னை:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரை கர்நாடகா அரசு கிருஷ்ணராஜ சாகர் கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்துவிட்டுள்ளது. மறுபுறம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழக காவேரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியில் இருந்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. அதாவது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி காலை 11 மணி நிலவரப்படி விநாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அன்று இரவே 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. 23 ஆம் தேதியான நேற்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கான நீர்வரத்து 43,000 கன அடியாக இருந்தது. நேற்று மாலை, ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.